வியாழன், 9 செப்டம்பர், 2010

பிரம்படி


ஆக்கம் அல்லையூர்-தர்மினி


வீட்டுப்பாடம் செய்யாததற்கோ அல்லது சொல்வதெழுதலில் பிழைகள் வாங்கினாலோ பிரம்பு பிய்யப் பிய்ய அடிவிழும். ஆகவே அடி, அழுகை என்று தான் வகுப்புகள் நடக்கும். என் சினேகிதி அடிக்கடி அடி வாங்குவாள். பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போனதும் வகுப்பில் அழுததை விட அதிகமாக அங்கு அழுது அடையாளங்களைக் காட்டுவாள். அடுத்த நாள் நிச்சயமாகப் பள்ளிக் கூடம் வரவே மாட்டாள். ஆனால் அவளுடைய அப்பா பள்ளிக்கூடம் வருவார்.

பாடசாலைகள் ஆரம்பித்து விட்டன. குளிரும் மெதுமெதுவாகப் பற்றிப் படரத் தொடங்குகிறது.
காலை நேரங்களில் தாய்மார் பிள்ளைகளுடன் போராட வேண்டும். “குளிருது” என்று போர்வையை இழுத்து மூடும் பிள்ளைகளிடம் அதைப் பறித்து இழுத்துத் தயார்ப்படுத்துவது பெரிய வேலை. விடுமுறை முடிந்து பாடசாலையின் முதல் நாள், தன் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்த என் பக்கத்து வீட்டிலிருப்பவர் சொன்னார்  “பள்ளிக்கூடம் தொடங்கிட்டுது இனிப் பிள்ளைகளில கைவைக்க ஏலாது”  , “இரண்டு மாசமாக நல்ல அடி குடுத்தல்லவோ அவையளத் திருத்தினான்” எனக்குக் கோபம் கலந்த சிரிப்பு வந்தது.
பிள்ளைகளின் மனநிலையைப் பற்றிக் கவலைப்படாத பெற்றவர்கள் அரசின் சட்டங்களுக்குப் பயந்து அதைக் கடைப் பிடிக்கின்றார்கள். கோபத்தில் கையினாலோ அகப்பட்ட ஏதாவது ஒரு பொருளினாலோ தங்கள் பிள்ளைகளுக்கு அடிக்கும் தாய் , தகப்பன் அதனால் அடையாளம் ஏற்படக் கூடாதென்றும் கண்டலோ வீக்கமோ வந்து விடுமோ என்று உள்ளுக்குள் பயந்த படியே தான் அடிப்பார்கள். தனது ஆசிரியரிடம் அதைக் காட்டி விட்டாலோ ஏதாவது சந்தர்ப்பத்தில் அடையாளத்தைக் கண்டு பாடசாலையில் விசாரித்தாலோ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விடும். அல்லது பிள்ளைகள் கவலையாகவோ படிப்பில் அக்கறையில்லாமலோ இருக்கும் போது ஆதரவாகக் கூப்பிட்டு விசாரிக்கும் ஆசிரியர், வீட்டில் என்ன பிரச்சனை என்று கேட்டால் அவர்கள் சொல்லி விட வாய்ப்புண்டு. இப்படிப் பல பயங்களினால் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு அடிக்கப் பயப்படுவார்கள். இன்னுமொருவர்  சொன்னது , தான்  வெள்ளிக்கிழமை இரவில் அடிப்பதாகவும், சனி ஞாயிறில் வீக்கம் வற்றிவிடும் பிள்ளையும் மறந்து போயிரும் என்பது வசதியாக இருக்கும் என்றார்.  “நாங்கள் அடிச்சுத் தான் வளர்க்கிறம். முறிச்சுத் தான் வளர்க்கிறம்” என்று பெருமையாகத் தங்களின் அதிகாரம் பற்றிப் பேசும் தாய், தகப்பன் அவர்கள் (பிள்ளைகள்) திருப்பி அடிக்காத காரணத்தினால் தான் எம் விருப்பத்திற்கு அடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. பிள்ளைகளை உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது ,அடிப்பது என்பவற்றைப் பிரான்சில் பாடசாலைகளில் செய்வதில்லை. அவ்வாறு மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் பிள்ளைகளைப் பெற்றோரிடமிருந்து காப்பாற்றிப் பொறுப்பெடுத்து அதற்கான நிலையங்களில் வைத்துப் பராமரிக்கிறார்கள். சிறுவர்கள் பாடசாலைகளில் சொல்லி விடக் கூடும் என்று பயங்கொள்ளும் பெற்றோர் அதற்கான காரணத்தை யோசித்து இயல்பாகவே தாம் அவ்வாறு மாறப் பழக வேண்டும் என நினைப்பதில்லை.
இந்தச் சூழலுக்கு எதிரான இலங்கையின் கிராமப் பாடசாலையொன்றில் படித்த எனக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது என் சினேகிதியின் அப்பாவின் ஞாபகம்.
அங்கு கையில் பூவரசங் கொப்புடனோ அல்லது பிரம்புடனோ தான் ஆசிரியர்கள் பள்ளிக்கூட வளவுக்குள் காலடி எடுத்து வைப்பார்கள். அவர்கள் அதை மறந்து போய் வந்திருந்தால் யாராவது உயரமான மாணவனைத்   ” தடி முறிச்சுக் கொண்டு வா” என அனுப்பிய பின்னர் தான் படிப்பிக்கத் தொடங்குவார்கள். அடிவாங்குவது, அலறுவது, கைகளை முதுகுகளைத் தடவுவது, கண்ணீரைத் துடைப்பது ,தோள் மூட்டில் மூக்கைத் தேய்ப்பதெல்லாம் வெகு சாதாரணக் காட்சியாகி இரக்கப்பட முடியாதளவுக்குப் பழக்கப்பட்டவர்களாக அடி வாங்காதவர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
வீட்டுப்பாடம் செய்யாததற்கோ அல்லது சொல்வதெழுதலில் பிழைகள் வாங்கினாலோ பிரம்பு பிய்யப் பிய்ய அடிவிழும். ஆகவே அடி , அழுகை என்று தான் வகுப்புகள் நடக்கும். என் சினேகிதி அடிக்கடி அடி வாங்குவாள். பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போனதும் வகுப்பில் அழுததை விட அதிகமாக அங்கு அழுது அடையாளங்களைக் காட்டுவாள். அடுத்த நாள் நிச்சயமாகப் பள்ளிக் கூடம் வரவே மாட்டாள். ஆனால் அவளுடைய அப்பா பள்ளிக்கூடம் வருவார். பள்ளிக் கூட வாசலில் கர்ஜனை கேட்கும்.பெரிய குரலெடுத்துத் திட்டிக் கொண்டே அதிபரைத் தேடிப் போவார். “என்ர  மகளுக்கு ஏன் அடிக்க வேணும்? அவளுக்கு அடிச்ச வாத்தியார் எங்க?”  என்று கத்தும் சத்தத்தில் அத்தனை வகுப்புகளும் அமைதியாகும். இது தெரிந்த ஆசிரியர்கள் அந்தப் பிள்ளையில் கை வைக்காமல் தவிர்க்கப் பழகத் தொடங்கி விட்டனர்.ஆனால் புதிதாக வருபவர்கள் எதிர்பாராத இச்சம்பவத்தால் திகைத்து நிற்பார்கள்.
ஆதலால், இலங்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதில்லை என்பதல்ல அர்த்தம். சித்திரவதைக் கூடங்களாகப் பள்ளிக்கூடங்கள் மாணவர்களைத் வதைத்தன என்பது தான் உண்மை.
ஆனால் , இங்கு பெற்றவர்களின் வன்முறைகளிலிருந்து பிள்ளைகள் தஞ்சங் கோரக் கூடிய இடமாகப் பாடசாலைகள் ஆறுதலளிக்கின்றன. அவர்கள் மீதான வன்முறைகள் சட்டத்தின் மூலமாவது தடுக்கப்படுகின்றன. குழந்தைகளை வன்முறையால் வழிப்படுத்துவது தவறானதென்று தண்டனை என்ற பயமுறுத்தல் தான் தடுக்கின்றது.

1 commentaires:

  1. தர்மினியின் கட்டுரை அருமை. வகுப்பறையில் செய்த, செய்யாத தவறுகளுக்காகப் பட்ட அடிகள் நினைவில் வந்து, மனம் அழுதது. கட்டுரையைப் பாராட்டப் புறப்பட்ட இடத்தில் என் மன ஆதங்கத்தையும் முன்வைக்கிறேன். வீட்டுப்பாடம் செய்யாததற்காகவும், சொல்வதெழுதுதலில் பிழைகள் வாங்கியதற்காகவும் மட்டுமா அடி விழுந்தது.? ஆசிரியருக்கு வீட்டில் தனிப்பட்ட பிணக்கு என்றாலும், மாணவன், மாணவியின் நலிவடைந்த குடும்பப் பின்னணி ஆசிரியருக்கு நன்கு தெரிந்திருந்தாலும் காரணமில்லாமலே அடி விழுமல்லவா?

    பதிலளிநீக்கு