செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நல்லைக் கந்தனின் ஆனந்தமான தேர்த் திருவிழா இன்று!

 கலியுக வரதனான கந்தப் பெருமானுக்கு நல்லையம்பதியிலே இன்று காலை தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் ஆறுமுக சுவாமியாக வள்ளி தேவசேனாதிபதியாகச் சித்திரத் தேரிலே ஆரோகணிக்கும் அருட்காட்சியை இன்று நல்லூரிலே காணலாம்.
இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் அடியார்கள் இந்த விழாக் காணவென நல்லூரை முற்றுகையிடும் நாள் இன்றாகும். அழகன் முருகன் திருத் தேரிலே வலம் வரும் அன்பு மயமான பக்தி பூர்வமான அற்புதத் திருக்காட்சி வருடத்திலே ஒரு முறையே கண்டுகளிக்க முடியும்.
திரும்பிய பக்கமெல்லாம் அடியார் கூட்டம் அலைமோதும் இந்த நல்விழா இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும்.

திரண்டிருக்கும் ஜனத்திரள் நடுவே தங்கத்தோணி தகதகவென ஜொலிப்பது போல அழகே ஓருருவெடுத்தாற் போன்று தங்க நகைகள் ஒளிவீசி நிற்க முருகன் அலங்காரக் கந்தனாக அருள்பாலிக்கும் அழகே தனி.

'முருகா முருகா' என்று ஓசை எழுப்பிய வண்ணம் அடியார்கள் வடம்பிடித்துத் தேரிழுக்கின்ற அழகான அருட்பவனி காணக் கண் கோடி வேண்டும். முருகனின் பேரழகைக் கண்டு தரிசித்த அருணகிரிநாதர் 'சேலார் வயற் பொழில் செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான் முகனே' என்று அங்கலாய்ப்பதன் பொருள் இன்று தெற்றெனப் புலப்படுகின்றது.

முருகன் என்றாலே அழகன் என்றுதான் பொருள். அதுவும் இந்த நல்லூரிலே குடியிருக்கும் கந்தன் அலங்காரக் கந்தன். எப்பொழுதும் அலங்காரமாகவே அருட்காட்சி தருவான். நல்லூர் முருகப் பெருமானின் திருத் தேர் வடம் பிடித்திழுத்தால் சொர்க்கத்திலே ஓரிடம் பிடிக்கலாம் என்பது ஆன்றோர் நம்பிக்கையாகும்.

இன்று நல்லூரில் பால்காவடி, பறவைக்காவடி, தூக்குக் காவடி, துலாக் காவடி என்று பலவித காவடி எடுக்கும் பக்தர்களையும் ஆங்காங்கே காண முடியும். இது ஒருபுறமிருக்க பஜனைக் கோஷ்டிகளும் முருகன் புகழ் பாடிக் கொண்டு வீதி வலம் வருவதையும் காணக்கூடியதாகவிருக்கும்.

அத்துடன், அங்கப் பிரதட்சணம் செய்யும் அடியார்களும் நேர்த்திக் கடன்களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கற்பூரச் சட்டி எடுத்தும் விழுந்து விழுந்து கும்பிட்டு அடியழித்தும் வரும் பெண் அடியார்களும் முண்டியடித்துக் கொண்டு 'முருகா முருகா' என்று உச்சரித்துக் கொண்டும் வருவது நெஞ்சைத் தொடும் காட்சியாகும்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக தேருக்கு முன்பாக மங்கள வாத்திய இசை முழங்கிய வண்ணம் இருக்கும். பிரபல்யம் பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களும் தவில் வாசிக்கும் கலைஞர்களும் முருகப் பெருமானின் பாடல்களோடு ஐக்கியப்பட்டு மன ஒருமைப்பாட்டுடன் வந்த வண்ணமிருப்பர்.

தேரைச் சூழக் குழுமி வரும் அடியார்கள் தேரிலே வீற்றிருக்கும் ஷண்முகப் பெருமானுடைய பேரழகுப் பொலிவைக் கொஞ்ச நேரம் தேரிலே கண்களால் அள்ளிப் பருக ஆசைப்பட்டவர்களாக இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறி ரதத்துக்கு முற்பக்கம் செல்ல முனைவார்கள்.

ஆனால் இவர்கள் அடியார்களையெல்லாம் விலக்கிக் கொண்டு முன்னேறி வர முத்தி தேர் இழுக்கப்பட்டு விடும். இப்படி வீதி முழுவதும் பார்த்தாலும் ஆறுமுகனின் அழகை ஆறுதலாகப் பார்ப்பதென்பது முடியாத காரியம்.

இவ்வளவு இலட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த நல்லைக் கந்தனின் தேர்த்திருவிழாச் சிறப்பு எழுத்தில் வடிக்க முடியாது. இந்த விழாவை நேரில் வந்து பார்த்தால்தான் தேரில் எழுந்தருளும் ஷண்முகனின் அழகான அற்புதக் காட்சியைப் பார்த்து அவனைத் தரிசிக்க முடியும்.

இந்தத் தேரானது அடியார்களால் 'அரோஹரா' கோஷத்துடனே இழுக்கப்பட்டு இருப்புக்கு வந்தவுடனே பஞ்சாராத்தி காண்பிக்கப்படும். அதற்குப் பிறகு ஆலயக் குருக்கள்மார் வந்து ஆறுமுக சுவாமிக்குப் பச்சை சாத்துவார்கள்.

இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் பெருமானின் ஆடை அலங்காரம் முழுவதும் பச்சையாகவே இருக்கும். மாலை, சேலை, வேட்டி, சால்வை, குடை எல்லாமே பச்சைதான்.பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் தெவிட்டாத திவ்ய அருட்காட்சி இது.

ஆடி ஆடி அசைந்த வண்ணம் அங்குமிங்குமாக இரு பக்கமும் நிற்கின்ற அடியவர்கள் முருகனைப் பார்த்துக் கும்பிடத் தக்கதாக வருகின்ற இந்தத் திருக் காட்சியை வேறு எங்குமே காண முடியாது. வீதி முழுவதும் பார்த்தால் ஒரே தலைகளாகத்தான் தெரியும். அவ்வளவு ஜனத்திரள் மத்தியிலே ஷண்முகப் பெருமான் ஆடி ஆடி ஆலயத்தினுட் செல்லும் நிகழ்வு பக்திபூர்வமானது.

'தொல்லை வினை தீர்க்கும் நல்லைக் கந்தனே முருகா! தோத்தரித்தோம் உனை நாம், இல்லையெனாது வரமீந்தருள வேண்டுமையா! எல்லையற்ற நின் கருணைத் திறம் காணக் கல்லையொத்த மனமும் கசிந்துருகி நிற்குமே' என்றபடி இந்தத் தேர்த்திருவிழா மிகச் சிறப்புள்ளது.

1 commentaires: