வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அல்லைப்பிட்டியில் நடைபெறும் இரு சட்டவிரோத சம்பவங்கள்- நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன!

கடந்த சில நாட்களாக அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் அதிகளவான மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவ்வூர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்தவொரு அனுமதியும் பெறப்படாமல் மாடுகள் வெட்டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இதேவேளை சட்டவிரோதமாகக் கொண்டு வந்து அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் மாதுபானங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் அங்குள்ள மதுப்பிரியர்களால் அவ்வூர் மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களாகவும் மது அருந்தியவர்களின் குடும்பங்களின் அடிக்கடி கருத்து முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி இரு பிரச்சினைகள் தொடர்பில் இன்று நாடாளுமன் உறுப்பினர் செல்விஸ்திரி அலன்ரின் தலைமையில் நடைபெற்ற வேலணை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனை அப் பிரதேசத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் கூட்டத்தில் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
அவர் அங்கு பேசியதாவது, அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் மாடுகள் களவாக இறைச்சிக்கு வெட்டப்படுவதும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பதும் அண்மைக் காலமாக அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு அங்கு வந்திருந்த ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகரின் குற்றச்சாட்டினை மறுத்துள்ளதுடன் இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் தான் கடுமையான நடவடிக்கையினை எடுப்பதாகவும் கூட்டத்தில் உறுதி வழங்கியுள்ளார்.

0 commentaires:

கருத்துரையிடுக