வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நிழலாடும் நினைவுகள்

யாழ் மண் இணையத்தளத்தைப் பார்த்தபோது என்னை அறியாமல் பழைய நினைவுகள் வந்து மோதின. என் அனுபவப் பகிர்வையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

1985ஆம் ஆண்டு என் உயிர் நண்பனுடன் நல்லூர்த் தேர்த்திருவிழாவுக்கு வேட்டி கட்டிக்கொண்டு சைக்கிளில் போயிருந்தேன். இதற்கு முன்னர் வேட்டி கட்டிப் பெரிதாகப் பழக்கமில்லை. முதல் தடவை என்ற காரணத்தால் வேட்டியில் சற்று கவனமாகவே இருந்தேன். 

நல்லூர்த் தேர்திருவிழாவன்று சனக்கூட்டத்தைச் சொல்லவும் வேண்டுமா? மண்போட்டால் மண் விழாது என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் அங்கு மிகத்தெளிவாக விளக்கப்படும்
. 
குறித்த நேரத்தில் கந்தன் தேரேறி வருவதை கோவிலின் முன் வீதி மதில் ஓரத்தில் நின்று நானும் ரசித்தேன். சனக்கூட்டம் தேரோடு சென்ற பின்னர், நின்ற சனக் கூட்டத்தை விலத்தி, ஒருவாறு ஆலயத்துக்குள் சென்று வாசலை வந்தடைந்த போது மேலாடையை களைந்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டுமென நண்பன் சொல்ல திகைத்து விட்டேன்! 

மேலாடைகழற்றுவதில் தயக்கம் ஒரு பக்கம், அரையில் உள்ள வேட்டி வழுகிவிடாது சணல் கயிறு கொண்டு சுற்றிக்கட்டியிருந்ததால் வெட்கம் ஒருபுறம், இருந்தாலும் நண்பனின் அழைப்பை தட்டமுடியாமல் மேலாடையைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றேன்.




அதன் பின்னர் 10 ரூபாவுக்கு கச்சான் வாங்கிக் கொறித்துக் கொண்டு ஐஸ்கிறீம் குடிப்பதற்காக நீண்ட தூரம் நடந்து சென்று கடைகள் இருக்கும் இடத்தை சென்றடைந்தோம். அங்கே பல ஐஸ்கிறீம் கடைகள் போடப்பட்டிருந்ததுடன் பல பெயர்களில் ஐஸ்கிறீம் வான்கள் அடுக்கி விடப்பட்டிருந்தன. ஆனால் கிட்ட நெருங்க முடியாத சனக் கூட்டம்.

ஒருவாறு நானும் நண்பனும் றியோ கடையை அடைந்து ஸ்பெஷல் ஐஷ்கிறீம் வாங்கிக் குடித்தோம். ஐஸ்கிறீம் உள்ளே போகப்போக சனக்கூட்டத்தில் ஏற்பட்ட களைப்பும் வியர்வையும் காணாமல் போனது. அதன் சுவையும் குளிரும் களைப்பிற்கு அருமருந்தாக அமைந்தது. ஆசை தீர இரண்டு ஸ்பெஷல் ஐஸ்கிறீம்களை வாங்கி குடித்துவிட்டு வீடு திரும்பினோம். 

அதன் பின்னர் நாட்டுப்பிரச்சினை காரணமாக என்னால் திருவிழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது வெளிநாட்டில் வசித்து வருகின்றேன். அன்று இருந்த ஆர்வம் இன்றும் என்னுள் இருக்கின்றது. இந்த வருட தேர்த்திருவிழாவைப் போய் பார்ப்பதற்கு ஆசையாய், ஆர்வமாய் இருக்கிறேன்.

யாழ்ப்பாணத்திற்கான A9 பாதை திறந்து விடப்பட்டிருப்பதால் எந்த நேரத்திலும் அங்கு போய் வரலாம். தேர்த்திருவிழாவுக்குப் போகவேண்டும் என்று என் மனம் என்னுகிறது.. ஆனாலும் என் நண்பன் அருகில் இல்லை என்ற ஏக்கம் மட்டும் என் நெஞ்சில் முள்ளாய் குத்தி நிக்கின்றது.

0 commentaires:

கருத்துரையிடுக