வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பெற்ற மகளை விச ஊசி போட்டுக் கொன்ற தந்தை...


காதலர்களை மாற்றினார் மகள் : விஷ ஊசியால் கொன்றார் தந்தை!




மதுரை : மகள் அடிக்கடி காதலர்களை மாற்றியதால், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என கருதிய தந்தை, விஷ ஊசி போட்டும், மருந்து கொடுத்தும் 18 வயது மகளை கொலை செய்தார். இதற்கு உடந்தையாக இருந்ததாக, அரசு மருத்துவமனை ஊழியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை எஸ்.எஸ்.காலனி, ராமநாதன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி(47). பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்ஷாப் நடத்துகிறார்.


இவருக்கு மனைவி லட்சுமி, இரு மகன்கள், மகள் மாரிச்செல்வி(18) உள்ளனர். மகள் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.நேற்று முன்தினம் மதியம், மாரிச்செல்வி விஷம் குடித்ததாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்தனர். அப்போது, தாயார் லட்சுமி,"எங்களதுஒர்க்ஷாப்பில் வேலை செய்த அலங்காநல்லூர் கோட்டைமேட்டைச் சேர்ந்த மூர்த்தியுடன்(24) வந்த இரண்டு பேர், காலில் விஷ ஊசி போட்டதாகவும், காதில் மருந்து ஊற்றியதாகவும் என் மகள் தெரிவித்தாள்.
மூர்த்தியிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும்' என்றார்.மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மாரிச்செல்வி கொலையில், தந்தை ரங்கசாமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கொலைக்கான பின்னணி:சில ஆண்டுகளாகவே மாரிச்செல்வி ஒருவரை காதலிப்பதும், பின் வேறு ஒருவரை காதலிப்பதுமாக இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புகூட, ஒரு காதலர் மாரிச்செல்வி வீட்டிற்கே வந்து, திருமணம் செய்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

எஸ்.எஸ்.காலனி போலீசார் தலையிட்டு, அந்த நபர் மீது, "பெட்டி கேஸ்' போட்டு அனுப்பினர். உடனடியாக மாரிச்செல்விக்கும், தாய்மாமன் மோகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மோகன், கம்பி கட்டும் தொழிலுக்காக சிங்கப்பூர் சென்றார். அதுவரை சென்னை வடபழநியில் உள்ள சகோதரர் மாரிமுத்து வீட்டிற்கு, மாரிச்செல்வியை, ரங்கசாமி அனுப்பி வைத்தார். அங்கும் ஒருவரை காதலித்த மாரிச்செல்வி, மொபைல் போன் ஒன்றை காதலனுக்கு பரிசாக அளித்தார். இதையறிந்த மாரிமுத்து கண்டித்ததால், மாரிச்செல்வி மாயமானார்.

வடபழநி போலீசில் புகார் செய்யப்பட்டது.அவர், கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரை அழைத்துக் கொண்டு கடந்த 15ல் பெற்றோர் மதுரை திரும்பினர். மாரிச்செல்விக்கும், மோகனுக்கும், நாளை நெல்லை மாவட்டம் தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையே, மோகனின் செயல்பாடுகள், ரங்கசாமிக்கு திருப்தி அளிக்கவில்லை.

அவருக்கு திருமணம் செய்து வைத்தாலும், மகளின் காதல் தொடரும் எனக்கருதி, அவரை கொலை செய்ய முடிவு செய்தார். ஒர்க்ஷாப்பில் பணிபுரியும் மூர்த்தியின் உதவியை நாடினார். அவர், தனது நண்பர்களான பரவையில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் பணிபுரியும் வேல்முருகன்(35), அரசு மருத்துவமனை கம்பவுண்டர் பாலமுருகனை(41), ரங்கசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். நால்வரும் அடிக்கடி சந்தித்து, எப்படி கொலை செய்வது என ஆலோசித்தனர். கொலை நடந்தது எப்படி? கடந்த 23ம் தேதி, விஷ ஊசி போட்டு, கொலை செய்ய முடிவு செய்தனர்.

திருமண செலவிற்காக வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வரும்படி மனைவி லட்சுமி, மகன் சண்முகராஜாவை, ரங்கசாமி அனுப்பினார். பின், வேல்முருகன், பாலமுருகனை "ஏசி' மெக்கானிக் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்தார். மூர்த்தியும் உடன் இருந்தார். கொலை செய்ய ஆயத்தமாவதற்குள், லட்சுமி, சண்முகராஜாவும் வீடு திரும்பியதால், கொலையாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தற்கொலை "நாடகம்:நேற்று முன்தினம் மீண்டும் வங்கிக்கு மனைவி, மகனை அனுப்பிய ரங்கசாமி, மாரிச்செல்வியிடம் "வீட்டை முன்பக்கம் பூட்டிக்கொள். பின்பக்கம் திறந்து வைத்திரு. "ஏசி' மெக்கானிக் வருவர்' எனக் கூறி, வெளியே கிளம்பினார்.

சிறிது நேரத்தில், மூர்த்தி உட்பட மூன்று பேர் வந்தனர். "ஏசி'யை சரிசெய்வது போல் நடித்த அவர்கள், மாரிச்செல்வி வாயை பொத்தி, படுக்க வைத்தனர். காலில் விஷ ஊசி போட்டனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, வாய், காதில் பூச்சிமருந்து ஊற்றினர். சிறிது நேரத்தில் மாரிச்செல்வி மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி, மூவரும் வெளியேறினர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி சத்தம் போட, அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர்.

ஒன்றும் அறியாதது போல் ரங்கசாமியும் ஓடி வந்தார். அந்த நேரத்தில் வங்கியிலிருந்து மனைவியும், மகனும் வர, மூர்த்தி உட்பட மூன்று பேர் விஷ ஊசி போட்ட விவரத்தை கூறி மாரிச்செல்வி மயக்கமடைந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் ரங்கசாமி உடனிருந்தார். அங்கு மாரிச்செல்வி இறந்தார். இக்கொலை வழக்கில் மாரிச்செல்வி தந்தை ரங்கசாமி,மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

0 commentaires:

கருத்துரையிடுக